தேவிபட்டினம் நவபாஷாண கடல் உள்வாங்கியது; பக்தர்கள் சிரமம்
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடல் உள்வாங்கியதால், பக்தர்களும், மீனவர்களும் சிரமம் அடைந்தனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும் பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவபாஷாண கடல், இன்று அதிகாலை முதல் கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. இதனால், நவகிரகங்கள் அமைந்துள்ள கடல் பகுதியில், கடல் நீரின்றி தரை மட்டம் தெரிந்தது. இதனால், அனைத்து நவகிரகங்களையும் அடிப்பகுதி முதல் முழுமையாக தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைத்தது. அதே நேரத்தில், கடல் நீர் உள் வாங்கியதால், கடல் நீரில் இறங்கி நவக்கிரகங்களை சுற்றி வந்து புனித நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், கரையோரம் நிறுத்தி வைத்திருந்த மீன்பிடி படகுகளை, மீண்டும் கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் மீனவர்கள் பாதிப்புக்கு உள்ளாகினர். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் சுழற்சி மற்றும் தாழ்வழுத்த நிலை உருவாகும் சூழல் காரணமாகவும், கடல் உள்வாங்கி வருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர். காலையில் உள்வாங்கி காணப்பட்ட கடல், மாலை 3:00 மணிக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.