வல்லக்கோட்டை முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடக்கம்
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஏழு ஆண்டுகளுக்குப் பின், வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாத 10 நாள் பிரம்மோத்சவ விழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, கடைசியாக 2019ம் ஆண்டு வைகாசி பிரம்மோத்சவ விழா நடைபெற்றது. இதையடுத்து, கொரோனா தொற்று மற்றும் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளால் ஏழு ஆண்டுகளாக பிரம்மோத்சவ விழா நடைபெறவில்லை. இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, ஆண்டுதோறும் கோவிலில் நடத்தப்படும் முக்கிய விழாக்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, ஏழு ஆண்டுகளுக்கு பின், வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது தொடந்து, உத்சவத்தில் முதல் நாள் காலை சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் வீதியுலா வந்து அருள்பாலித்தார். அதேபோல, மாலை வெள்ளி மயில் வாகன வீதியுலா புறப்பாடு நடந்தது.