திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் வைகாசி விசாக கொடியேற்றம்
திருப்பூர்: திருப்பூரில் விமரிசையாக நடைபெற உள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களின் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, நேற்று வேதமந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன் கூடிய கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்கியது.
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நந்தியெம்பெருமான், சூரியன் – சந்திரன், பூஜைமணி, தூபக்கால் படங்கள் பொறிக்கப்பட்ட கொடியைச் சிவாச்சாரியார்கள் முறைப்படி கோவிலைச் சுற்றி எடுத்து வந்தனர். பின்னர், பக்தர்களின் அரஹரா முழக்கத்திற்கு இடையே கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, துாப, தீப ஆராதனைகளுடன் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் கருட சின்னத்துடன் கூடிய கொடியைப் பட்டாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்து கொடிமரத்தில் ஏற்றினர். தொடர்ந்து, கொடிமரத்திற்குத் துாபம் மற்றும் தீபம் காண்பித்து பூஜைகள் செய்யப்பட்டன.
முன்னதாக, சிவ கண வாத்திய இசையுடன் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் விநாயகர், சூலதேவர், விசாலாட்சியம்மன் மற்றும் சோமாஸ்கந்தருக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கொடியேற்றத்திற்குப் பிறகு, ஸ்ரீசோமாஸ்கந்தர் கற்பக விருட்ச வாகனத்திலும், விசாலாட்சியம்மன் சிம்ம வாகனத்திலும், ஸ்ரீதேவி - பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தினமும் திருவீதியுலா கோவில் செயல் அலுவலர் வனராஜா கூறுகையில், "தேர்த்திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலையில் வீரராகவப்பெருமாள் புதிய காட்சி வாகனங்களில் திருவீதியுலா வரவுள்ளார். அதேபோல் காலையில் ஆனந்தவல்லி சமேத ஸ்ரீசந்திரசேகரர் சிம்மாசனத்திலும், சோமாஸ்கந்தர் மற்றும் விசாலாட்சி அம்மன் காட்சி வாகனங்களிலும் திருவீதியுலா வந்து அருள்பாலிக்க உள்ளனர்" என்றார்.