உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருத்தணி கோவிலில் குவிந்த பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நேற்று விடுமுறை நாள் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால், இரண்டு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர்.

திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை என்பதால், வழக்கத்திற்கு மாறாக மலைக்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே குவிந்தனர். இதனால், பொது வழியில் மூலவரை தரிசிக்க, இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் தரிசித்தனர். அதேபோல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.

நேற்று, இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலைப்பாதையில் அனுமதிக்கப்பட்டன. பக்தர்கள் நலன்கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், 10 பேருந்துகள் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டன. முன்னதாக, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபன் திமான் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !