ஊசலாடும் மரக்கிளையால் ஆபத்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், சூறாவளி காற்றுக்கு முறிந்து, ஊசலாடும் நிலையில் உள்ள மரக்கிளையை அகற்ற வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில் கலையரங்கம் அமைந்துள்ள பகுதியில் நிழல் தரும் வகையில் பல்வேறு மரங்கள் உள்ளன.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் கடந்த 21ம் தேதி சூறாவளி காற்றுடன் மழை பெய்தபோது, பழமையான புங்கன் மரத்தின் கிளை முறிந்து தொங்கியபடி ஊசலாடும் நிலையில் உள்ளது.
பக்தர்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், ஊசலாடும் நிலையில் உள்ள மரக்கிளை திடீரென முற்றிலும் விழுந்தால் அவ்வழியாக செல்வோர் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் பக்தர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, ஆபத்தை தவிர்க்கும் வகையில், ஊசலாடும் நிலையில் உள்ள மரக்கிளையை அகற்ற ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.