வல்லக்கோட்டை முருகன் கோவிலில் 7 ஆண்டிற்கு பின் தேரோட்டம் விமரிசை
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஏழு ஆண்டிற்கு பின், வைகாசி விசாக பிரம்மோத்சவ தேர் திருவிழா இன்று விமரிசையாக நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், கொரோனா பெருந்தொற்று மற்றும் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளால் ஏழு ஆண்டுகளாக பிரம்மோத்சவ விழா நடைபெறவில்லை. இதையடுத்து, ஏழு ஆண்டிற்கு பின் வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா இம்மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பத்து நாள் நடைபெறும் விழாவில், வெள்ளி மயில் வாகனம், சூர்யபிரபை, சந்திரபிரபை, கேடய உற்சவம், ஆட்டுக்கிடா வாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் நாள்தோறும் முருகப்பெருமான் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு செய்து அருள்பாலித்தார். விழாவின் ஏழாம் நாளான இன்று தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. காலை 7:00 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் ரத உத்சவம் நடைபெற்றது. இதில், வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு பங்கேற்று ரதத்தை வடம் பிடித்த இழுந்து தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், வள்ளி தெய்வானை சமேத முருகன் எழுந்தருளினார். வல்லக்கோட்டை கிராம வீதிகளில் தேர் பவனி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.