பூ பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கிய வரதராஜ பெருமாள்; பக்தர்கள் தரிசனம்
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் பூ பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து கோவிந்தா கோஷம் முழங்க குதிரை வாகனத்தில் நாள் முழுவதும் பவனி வந்தார்.
எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபைக்கு பாத்தியமான பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாள் கோயில் 119 வது வைகாசி வசந்தோத்ஸவ விழா நடக்கிறது. நேற்று காலை கும்ப திருமஞ்சனம் நடந்தது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு பெருமாள் சகலவித ஆயுதங்கள் ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்தில் அலங்காரமாகினார். அப்போது பூ பல்லக்கில் அமர்ந்து கோயில் முன்பு காவல் தெய்வம் கருப்பணசாமியிடம் விடை பெற்று தீபாராதனை நடந்தது. மேளதாளங்கள் முழங்க, வான வேடிக்கைகளுடன் காலை 5:30 மணிக்கு வைகை ஆற்றில் இறங்கினார். ஏராளமான மண்டகப் படிகளில் சேவை சாதித்து பரமக்குடி வழியாக தல்லாகுளம் அடைந்தார்.
அங்கு காலை 11:30 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி மீண்டும் பெரிய கடை பஜார் வழியாக மதியம் அனுமார் கோயிலில் விடையாற்றும் உற்ஸவம் நடந்தது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் முன்பு சிறப்பு தீப ஆராதனைகள் நடந்து, மாலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் ஆயிரம் பொன் சப்பரத்தில் பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க சேவை சாதித்தார். தொடர்ந்து எமனேஸ்வரம், நயினார்கோவில் ரோடு வழியாக அனைத்து நெசவாளர் குடியிருப்புகளுக்கும் சென்று இரவு 2:00 மணிக்கு வண்டியூர் மண்டகப்படியில் சேர்க்கை ஆகினார். அங்கு சந்தன காப்பு, சைத்யோபசாரம் நடந்தது. நாளை இரவு சேஷ வாகனத்தில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு காட்சி தருகிறார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள், கவுன்சிலர்கள் செய்துள்ளனர்.