திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
திருப்பூர்: சைவ மற்றும் வைணவ ஒற்றுமைக்கு உன்னத எடுத்துக்காட்டாகத் திகழும் திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களின் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, கடந்த மே 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் தொடர்ச்சியாக, கடந்த 28-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், கருட சேவை வழிபாடுகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. நேற்று, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ வீரராகவ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். மாலை 5:30 மணியளவில், மக்கள் பிரதிநிதிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள் பக்திப் பெருக்குடன் தேரின் வடம்பிடித்துத் தேரோட்டத்தைத் துவக்கி வைத்தனர்.
வேத விற்பன்னர்களின் வேத பாராயணங்களும், நாமகீர்த்தனைகளும் காற்றில் தவழ்ந்து வந்தன. கொங்கு மண்ணின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் பெருஞ்சலங்கை ஆட்டம் மற்றும் பவளக்கொடி கும்மியாட்டம் ஆகியவை தேருக்கு முன்னால் அணிவகுக்க, ஏராளமான பக்தர்களின் கரகோஷங்களுக்கு நடுவே திருத்தேர் ஆடி அசைந்தபடி கம்பீரமாக நகர்ந்தது. தேரோடும் வீதியெங்கும் அலைகடலெனத் திரண்டிருந்த பக்தர்கள், கோவிந்தா… கோபாலா… பெருமாளே… எனப் பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டபடி, கரம் கூப்பி இறைவனை மனமுருகிவழிபட்டனர்.