மகிழ்ச்சியாக வாழ துணைபுரியும் தேவார பாடல்கள்
திருப்பூர்: ‘கவலைகளிலிருந்து விடுபட்டு, மகிழ்ச்சியோடு வாழ, சம்பந்தரின் தேவார பாடல்கள் உற்ற துணையாக இருக்கின்றன,’ என, சித்தாந்த பேராசிரியர் சிவசண்முகம் பேசினார்.
கொங்கு மண்டல ஆடல் வல்லான் அறக்கட்டளை சார்பில், திருவாசகம் பயிற்சி வகுப்பு, திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டப வளாகத்திலுள்ள திருவருள் அரங்கில் நடக்கிறது. வாரந்தோறும் செவ்வாயன்று நடைபெறும் இந்த வகுப்பில், கோவையை சேர்ந்த சித்தாந்த பேராசிரியர் சிவ சண்முகம், திருவாசகம் குறித்து சொற்பொழிவாற்றி வருகிறார். திருஞான சம்பந்த சுவாமிகள் குருபூஜை தினமான நேற்று, திருஞான சம்பந்த மூர்த்திகள் திருமேனிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்விக்கப்பட்டது. உடுமலையை சேர்ந்த உமாநந்தினி, தேவார பாடல்கள் பாடி, துவக்கி வைத்தார்.
அதன்பின், சிவசண்முகம் பேசியதாவது: இந்த உலகத்தில் சைவ நன்னெறி சிறப்புற ஓங்குவதற்காகவுமே திருஞானசம்பந்தர் அவதரித்தார். சம்பந்தரின் வருகை, தமிழ் மொழி செய்த தவம் எனப் போற்றப்படுகிறது. தமிழ் மொழி இலக்கியத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஏகபாதம், திருக்குறள், மொழி மாற்று, மாலைமாற்று போன்ற புதிய இலக்கிய அமைப்புகளைத் தந்து அருளினார்.
கவலை அல்லது பதற்றமான சூழலில் இருந்து மக்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவற்றிலிருந்து விடுபடுவதற்கு, சம்பந்தரின் தேவார பாடல்கள் உற்ற துணையாக இருக்கின்றன. தேவாரம் பாடி, கடவுளை வழிபாடு செய்தால், வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், மன நிறைவோடும் அமையும். பரம்பொருளை வழிபாடு செய்து, எல்லா விதமான துன்பங்களிலிருந்தும் விடுபட்டு, இன்பத்தை பெற்று மகிழவேண்டும் என்பதுதான், சம்பந்தரின் திருமுறைகள் நமக்கு தருகின்ற செய்திகள். மூன்று திருமுறைகளாக கிட்டத்தட்ட 4,150 பாடல்களை அவர் அருளியுள்ளார். அவரது திருமுறைகளில், வரலாற்று நுட்பமான செய்திகள், தமிழிசைக்கு பெருமை சேர்க்கும் பண்னோடு கூடிய பாடல்கள் என, தமிழ் மொழிக்கும், சைவ சமயத்துக்கும் பல வகையிலும் பெருமை சேர்த்திருக்கிறார். இவ்வாறு, அவர் பேசினார்.