உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சையில் முத்து பல்லாக்கு விழா: விநாயகர், முருகன் ஊர்வலம்

தஞ்சையில் முத்து பல்லாக்கு விழா: விநாயகர், முருகன் ஊர்வலம்

தஞ்சாவூர், தஞ்சையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்,முருகன், அம்மன் வீதிஉலா வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரலாற்று பெருமை கொண்ட தஞ்சை நகரில் நடைபெறும் பாரம்பரிய விழாக்களுள் ஒன்று முத்துப்பல்லக்கு விழா. திருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகளின் குருபூஜையையொட்டி இந்த முத்துப்பல்லக்கு விழா கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி தஞ்சையில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து விநாயகர், முருகன் ஆகியோர் முத்துப்பல்லக்கில் எழுந்தருளி 4 ராஜவீதிகளிலும் உலாவருவார்கள். அதன்படி இந்த ஆண்டு முத்துப்பல்லக்கு விழா இன்று (3ம் தேதி )நடைபெற்றது. அதன்படி கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார், குறிச்சி தெரு சுப்பிரமணியசாமி, ஆட்டுமந்தை தெரு பாலதண்டாயுதபாணி, சின்னஅரிசிக்காரத்தெரு பழனியாண்டவர், மகர்நோன்புச்சாவடி சவுராஷ்டிராதெரு ஜோதிவிநாயகர், தெற்கு ராஜவீதி கமலரத்னவிநாயகர், மேலராஜவீதி சுப்பிரமணியசாமி, மேலராஜவீதி திருஞானசம்பந்தர், வடக்கு வாசல் பாலதண்டாயுதபாணி, மாமாசாகிப்மூலை சித்தி விநாயகர், சிரேஸ்சத்திரம் சாலை வடபத்ரகாளியம்மன், காமராஜர் மார்க்கெட் செல்வவிநாயகர், கொடிமரத்து மூலை பாலதண்டாயுதபாணி, மேலவெளி ஊராட்சி ரெட்டிப்பாளையம் சாலையில் உள்ள வெற்றி முருகன், தனலட்சுமி நகரை சேர்ந்த வலம்புரி விநாயகர் உள்பட்ட பல்வேறு கோவில்களில் இருந்து விநாயகர், முருகனும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஜோடிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் எழுந்தருளினர்.

பல்லக்குகள் பூக்களாலும், பல வண்ண காகிதங்களாலும், மின் விளக்குகளாலும் கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டு இருந்தன. இந்த பல்லக்குகள் அந்தந்த கோவில்களில் இருந்து புறப்பட்டு தஞ்சை தெற்கு வீதி, மேலராஜவீதி, வடக்கு ராஜவீதி, கீழராஜவீதி ஆகிய வீதிகளில் மேளதாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க வலம் வந்தன. முத்துப்பல்லக்கு வீதிஉலா நேற்று (2ம் தேதி) இரவு தொடங்கி இன்று (3ம் தேதி) அதிகாலை வரை விடிய, விடிய நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !