தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருவின் குருபூஜை விழா; வெள்ளி பல்லக்கில் ஆதீனம்
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருவின் குருபூஜை விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனகர்த்தரை வெள்ளி நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் தூக்கி செல்ல முந்தைய ஆதீனங்களின் குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தின் பட்டிணப்பிரவேச விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ஆம் நாள் விழாவான இன்று ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஞானபுரீஸ்வரர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டு தருமபுரம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்ல, மூன்று யானைகள், குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார். தொடர்ந்து வனதுர்க்கை அம்மன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக இதில் ஆதின கட்டளை தம்பிரான்கள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11ஆம் நாளான நாளை தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டிணப்பிரவேசம் நிகழ்வு இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞானகொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.