உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உத்சவம் விமரிசை

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உத்சவம் விமரிசை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான நேற்று, தீர்த்தவாரி உத்சவம் விமரிசையாக நடந்தது.


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோத்சவம், கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், கடந்த மாதம் 30ம் தேதி கருடசேவை உத்சவமும், கடந்த 3ம் தேதி தேரோட்டமும் வெகு விமரிைசயாக நடந்தது.


பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாள் உத்சவமான நேற்று காலை, ஆள்மேல் பல்லக்கில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். வீதியுலா முடிந்ததும், நுாறுகால் மண்டபத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். அங்கு பல்வேறு பூஜைகள் நடந்தன. பின், மண்டபத்தில் இருந்து சின்ன பெருமாள் என அழைக்கப்படும் ப்ரணதார்த்தி ஹர வரதர், கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணி திருக்குளத்தில் எழுந்தருளினார். அங்கு, பகல் 12:20 மணிக்கு மங்கல வாத்தியங்கள் ஒலிக்க திருக்குளத்தில் தீர்த்தவாரி உத்சவம் நடந்தது. தீர்த்தவாரி உத்சவம் முடிந்ததும், குளத்திற்குள் பாதுகாப்புக்காக கயிறு கட்டப்பட்டு இருந்த பகுதிக்குள் மட்டும் பக்தர்கள் நீராட போலீசார் அனுமதித்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர். பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவில் வளாகம், குளக்கரை மற்றும் குளத்திற்குள் என, 300க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்க்காவல் படையினரும், தீயணைப்பு மீட்பு படை வீரர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தீயணைப்பு மற்றும் போலீசார் சார்பில், இரண்டு பைபர் படகுகள் பாதுகாப்புக்காக, குளத்திற்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. பிரம்மோத்சவத்தின் 10ம் நாளான இன்று காலை த்வாதச ஆராதனமும், இரவு வெட்டிவேர் சப்பரத்துடன் வைகாசி பிரம்மோத்சவம் நிறைவுபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !