செஞ்சி அருகே கி.பி.,16ம் நுாற்றாண்டு நடுகல் கண்டு பிடிப்பு
செஞ்சி; செஞ்சி அருகே கி.பி., 16ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுகல்லை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
செஞ்சி தொல்லியல் விழிப்புணர்வு மன்ற தலைவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அன்னமங்கலம் முனுசாமி, செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் வடிவேல், ரங்கநாதன் மன்ற உறுப்பினர்கள் அருள், கார்த்திகேயன் ஆகியோர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சின்ன பொன்னம்பூண்டி கிராமத்தில் கள ஆய்வு நடத்தினர். அப்போது போர் வீரனின் நடுகல் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இது குறித்து மன்ற தலைவர் முனுசாமி கூறியதாவது.
பல ஆண்டுகளுக்கு முன்பு சின்னபொன்னம்பூண்டி கிராம வயல்வெளியில் நடுகல் ஒன்று இருந்தை பொதுமக்கள் எடுத்து வந்து ஊருக்கு அருகில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர். நடுகல் 99 சென்டிமீட்டர் உயரமும். 92 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. இதில் போர் வீரனின் புடைப்பு சிற்பம் வடித்துள்ளனர். போர் வீரன் நன்கு அலங்கரிக்கப்பட்ட இடுப்பு கச்சையும், கச்சையுடன் இணைக்கப்பட்ட உறையில் குறுவாளும் உள்ளது. வீரனின் வலது கையில் வில் ஏந்தியும், இடது கையில் நானில் அம்பை ஏற்றி எய்வதற்கு தாயார் நிலையிலும், அலங்காரிக்கப்பட்ட தலைமுடி மற்றும் இரண்டு கால்களிலும் வீரக்கழல் அணிந்தும் சிற்பத்தை வடித்துள்ளனர். வீரனின் கையில் உள்ள வில்லில் இருந்து அம்பு எய்வதற்கு தயார் நிலையில் இருப்பதை போல் சித்தரிக்கப்பட்டிருப்பதால் போரில் வீர மரணம் அடைந்த வீரனை பெறுமை படுத்தவும், வீரனின் நினைவாகவும் நடுகல்லை வைத்துள்ளனர். நடுகல்லின் சிற்ப கலை 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.