34 ஆண்டுகளுக்கு பின் ஶ்ரீ திரௌபதி அம்மன் திருவிழா: பக்தர்கள் உற்சாகம்
சிறுபாக்கம்; சிறுபாக்கத்தில் 34 ஆண்டுகளுக்கு பின் நடந்த ஶ்ரீ திரௌபதி அம்மன் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
சிறுபாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீமிதி திருவிழா 34 ஆண்டுகளுக்கு பின் நடத்த, திருவிழா கமிட்டி குழு, சமூக முக்கியஸ்தர்கள், பொது மக்களால் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 31ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தீமிதி திருவிழா துவங்கியது. 4ம் தேதி திருக்கல்யாணம், 5ம் தேதி ஊரணி பொங்கல், 6ம் தேதி துகிலுரிதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், விநாயகர், கிருஷ்ணன், மருதையன், திரௌபதி, மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகள், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் தினசரி வீதியுலா நடந்தது. தொடர்ந்து, இரவு 6:30 மணியளவில் நடந்த தீமிதி திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தியும், பூங்கரகம் எடுத்து தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், சுற்றுப்புற 20க்கும் மேற்பட்ட கிராம பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.