குன்றக்குடியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்ப திருவிழா நடைபெறும் வையாபுரி குளம் தூர்வாரும் பணி
காரைக்குடி; குன்றக்குடியில், நிலத்தடி நீர்மட்டத்தின் ஆதாரமாகவும், பங்குனி உத்திர தெப்பத் திருவிழா நடைபெறும் வையாபுரி குளம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் தமிழகத்தில் முக்கிய ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. குன்றக்குடியை சுற்றிலும் நிலத்தடி நீரின் அருமை அறிந்து பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏராளமான குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் எப்போதும் குறையாமல் இருக்க, இப்பகுதியில் வையாபுரி குளம் மற்றும் மருதாபுரி குளம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 17ம் நூற்றாண்டில் வையாபுரி குளமும், அதனைச் சுற்றி நந்தவனமும் உருவாக்கப்பட்டது. மேலும் குன்றக்குடியில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாவான பங்குனி உத்திரத் திருவிழாவின் போது வையாபுரி குளத்தில் பிரசித்தி பெற்ற தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறும். இக்குளமானது கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் கிடந்தது. குன்றக்குடிக்கு வரும் பக்தர்கள், திருச்செந்தூர், சபரிமலை செல்லும் பக்தர்கள் பலரும் இக்குளத்தில் நீராடிய பிறகு சாமி தரிசனம் செய்வர். குளம் முற்றிலும் சகதியாகி, குளிப்பவர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும், குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தற்போது குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் வழங்கிய நிதி உதவியால் குளம் தூர்வாரும் பணி துரிதமாக நடந்து வருகிறது.