உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நலனுக்காக கோவையில் பிரமாண்ட கோ பூஜை 25 ஆயிரம் பேர் பங்கேற்பு

உலக நலனுக்காக கோவையில் பிரமாண்ட கோ பூஜை 25 ஆயிரம் பேர் பங்கேற்பு

கோவை: உலக நலன், சமூக முன்னேற்றம் வேண்டி, ‘நமாமி கோமாதரம்’ என்ற, 108 கோமாதாக்களை எழுந்தருள செய்து, ஆதீனங்கள், மடாதிபதிகள், சிவாச்சாரியர்கள், பட்டாச்சாரியர்கள் சூழ கோவையில் கோ பூஜை மிக விமரிசையாக நடந்தது; பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்னர்.

கோவை- நகரிலுள்ள ராமநாதபுரம் ‘பேனியன் மேடோஸ்’ மைதானத்தில், விஸ்வ மங்களம் ஏற்படவும், தேச நலனுக்காகவும், சமூக உயர்வுக்காகவும் தென்கைலாய பேரவை ‘நமாமி கோமாதரம்’ நிகழ்ச்சியை நடத்தியது.

108 யாக சாலைகள் நேற்று முன் தினம் நடந்த இந்நிகழ்ச்சியில், 108 யாக சாலைகளை நிறுவி, 108 கன்றுகளுடன் கூடிய பசுக்களை எழுந்தருளுவித்து, 108 தம்பதியரை யாக சாலை முன் அமரச் செய்து சிவாச்சாரியர்கள் மற்றும் பட்டாச்சாரியர்கள், கோசூக்த மந்திரத்தை பாராயணம் செய்தனர். தம்பதியர்கள், கோமாதாவுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு, மலர் மாலைகளையும், வஸ்திரங்களையும் அணிவித்து, கற்பூர தீபாராதனை செய்து கோ பூஜையை நிறைவேற்றினர்.

இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற, தருமை ஆதீனம், 27 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய ஸ்வாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மஹாதேவ பரமாச்சாரிய ஸ்வாமிகள், கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57 வது குரு மஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ராஜ சரவண மாணிக்கவாசக ஸ்வாமிகள் அருளுரை வழங்கினர். சிரவை ஆதீனம் கவுமார மடாலயம் குமர குருபர ஸ்வாமிகள், காமாட்சிபுரி ஆதீனம் பஞ்ச லிங்கேஸ்வர ஸ்வாமிகள் ஆகியோர் முன்னின்று நிகழ்ச்சியை நடத்தினர்.

‘சக்தி குழுமங்கள்’ செயல் தலைவர் மாணிக்கம், ‘ஆர்ஷ வித்யா குருகுலம்’ துணைத்தலைவர் ரவிசாம், கற்பகம் கல்வி நிறுவனங்கள் துணைத் தலைவர் வசந்தகுமார், இணைச் செயலாளர் வக்கீல் பாலாஜி ஸ்ரீதர், கொங்குநாடு கல்லுாரி செயலாளர் வாசுகி, ‘மாதம்பட்டி’ தங்கவேல், ‘ப்ரோசன் சோலார்’ தனவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக அகில பாரத கோ சேவா பிரமுக் அஜித் மஹாபாத்ரா, பிரபல ஜோதிடர் ஷெல்வி தாமோதர், ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது:

பல்லாயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் ஆன்மிக, சமூக மற்றும் பொருளாதார வாழ்வின் மையமாக கோமாதா விளங்குகிறது. தர்மத்தின் திருவுருவமாக விளங்கும் கோமாதா, வெறும் விலங்கு அல்ல; உயிர்கள் அனைத்தையும் தாயன்புடன் காத்து வளர்க்கும் தெய்வீக அன்னையாக நம் முன்னோர்களால் போற்றப்பட்டுள்ளது.

சனாதன மரபு வேதங்கள், உபநிஷத்துகள், இதிகாசங்கள், புராணங்கள் என சனாதன மரபின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கோமாதாவின் மகிமை போற்றப்பட்டுள்ளது.

விவசாயத்தின் உயிர்நாடியாகவும், கிராமப்புற வாழ்வின் அடித்தளமாகவும், குடும்ப வளத்தின் அருளாதாரமாகவும் திகழ்கிறது.

இயற்கையோடு இணைந்து வாழும் உயரிய வாழ்க்கை முறையை மனிதகுலத்திற்கு கற்றுக் கொடுத்ததும் கோமாதாவே.

புனிதமான உறவு அதனால், பசுக்களை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறை, வளமான நிலங்களையும், செழிப்பான விவசாயத்தையும், ஒற்றுமை மிக்க சமூகத்தையும், பண்பாடு நிறைந்த குடும்பங்களையும் உருவாக்கியது. ஆனால், இன்று நவீன வாழ்க்கையின் வேகத்தில், மனிதன் இயற்கையுடனும், பசுக்களுடனும் கொண்டிருந்த புனிதமான உறவு மெல்ல மெல்ல விலகி வருகிறது. இதன் விளைவாக நமது பாரம்பரிய ஞானம், சுற்றுச்சூழல் சமநிலை, குடும்ப மற்றும் மனிதநேயப் பண்புகள் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இத்தகைய காலகட்டத்தில், உலக நன்மை, தேச வளம் மற்றும் குடும்ப நலன் நோக்கமாக கொண்டு, போற்றத்தக்க மகான்கள், சந்தியாசிகள் மற்றும் மடாதிபதிகளின் தெய்வீக அருளாசியுடன் விஸ்வ மங்களம் என்னும் உயரிய கருப்பொருளின் கீழ் கோ பூஜை நடைபெற்றது. இதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !