உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கை:மாணிக்கவாசகர் குருபூஜை விழா

உத்தரகோசமங்கை:மாணிக்கவாசகர் குருபூஜை விழா

உத்தரகோசமங்கை: சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராக மாணிக்கவாசகர் உள்ளார். இவரது இயற்பெயர் வாதவூரார். தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் மூத்தவர் மாணிக்கவாசகர் என அறியப்படுகிறது.

இவர் அரிமர்த்தன பாண்டியன் என்ற மன்னனின் அமைச்சரவையில் முதன்மை அமைச்சராக பணியாற்றி வந்தார். சிவபெருமான் மீதான பக்தியால் பல பதிகங்களை பாடியுள்ளார். மாணிக்கவாசகர் பாடிய பாடல்கள் திருவாசகம் என அழைக்கப்படுகிறது.

‘‘திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்,’’ என்பது சொல் வழக்காகும். உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் சகஸ்ர லிங்கத்துக்கு அருகில் தனி சன்னதியில் மாணிக்க வாசகர் எழுந்தருளியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் மகம் அன்று மாணிக்கவாசகரின் ஜென்ம நட்சத்திரம் தின குருபூஜை விழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று காலை 10:00 மணிக்கு மாணிக்கவாசருக்கு 18 வகையான அபிஷேக அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

ராமகிருஷ்ண சேவா மந்திர் விவேகானந்தா மாணவர் இல்ல நிர்வாகி சிவராம் தலைமையில் மாணவர்கள் மற்றும் சிவனடியார்களால் திருவாசகம் முற்றோதல் பாடப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !