உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்; நாளை மகாபிஷேகம்

சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்; நாளை மகாபிஷேகம்

 சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா தேரோட்டம் இன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வா வா நடராஜா வந்துவிடு, நடராஜா என்ற கோஷத்துடன் தேர் இழுத்தனர்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 13 ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனத்தில் சாமி வீதியுலா நடக்கிறது. கடந்த 17ம் தேதி இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் எழுந்தருள தெருவடைச்சான் வீதியுலாவும், நேற்று தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலாவும் நடந்தது.

முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடைபெற்றது. அதையொட்டி, சிவகாமசுந்தரி சமேத நடராஜர் அதிகாலை கோவிலில் புறப்பட்டு, தேரில் எழுந்தருளி, நான்கு வீதிகள் வழியாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்தவாறு தேரோட்டம் நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.

தேர் நிலைக்கு வந்ததும், இரவு 8:00 மணிக்கு தேரில் இருந்து ஆயிரங்கால் ன் முகப்பு மண்டபத்தில் சாமிகள் எழுந்தருளி, ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். தொடர்ந்து, நாளை (22ம் தேதி) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு, 4:00 மணி முதல் 6:00 ஸ்ரீ சிவாம சுந்தரி சமேத நடராஜருக்கு ஆயிரங்கால் மண்டப முகப்பில் மகாபிஷேகம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், மதியம், கோவிலில் இருந்து பஞ்சமூர்த்தி வீதியுலா புறப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் வந்தபின்பு, பிற்பகல் சுமார் 2:00 மணியளவில் சிவகாசசுந்தரி அம்பாள், நடராஜரும் முன்னும் பின்னும் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது. 23ம் தேதி முத்துப்பல்லக்கு வீதியுலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப் தலைமையில், 500 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !