பழையசீவரம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் கருடசேவை விமரிசை
வாலாஜாபாத்: பழையசீவரம், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆனி மாத பிரம்மோத்சவ விழாவில் கருடசேவை உத்சவம் விமரிசையாக நேற்று முன்தினம் நடைபெற்றது.
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், நடப்பாண்டிற் கான ஆனி பிரம்மோத்சவ விழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு வெண் பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், போர்வாள் கேடயம் அணிந்து மல்லிகை, மனோரஞ்சுதம் உள்ளிட்ட மலர்கள் சூட்டி ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதை தொடர்ந்து, தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்து வந்தது. 20ம் தேதி இரவு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கருடசேவை உத்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. விழாவையொட்டி, காலையில் லட்சுமி நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.