இன்று சனிப்பிரதோஷம் : சிவ தரிசனம் செய்து கடன் தொல்லை, மனக்கவலை நீங்க பெறுவோம்!
பிரதோஷ விரதம் இருந்தால், சிவன் ஜாதக குற்றங்களைப் போக்கி நன்மையளிப்பார். நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகிறோம். பிரதோஷ விரதம், இவற்றிலிருந்தும் நம்மைக் காக்க வல்லது. பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும். பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்திய நாள் சனிக்கிழமை என்றும், அதன் பிறகு அவர் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் நடனமாடி தேவர்களைக் காத்த நேரம் சனிக்கிழமை பிரதோஷ நேரம் என்றும் புராணங்கள் கூறுகின்றன. வாரத்தின் மற்ற நாள்களில் வரும் பிரதோஷங்களை விட, சனிக்கிழமை வரும் பிரதோஷத்திற்கு வீரியம் அதிகம். இதனால் இது "மகா பிரதோஷம்" என்றும் அழைக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் சிவபெருமானையும், நந்தியம்பெருமானையும் வழிபடுவதால் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி போன்றவற்றால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் சனி தோஷங்களின் வீரியம் குறையும் என்பது நம்பிக்கை.
சிவன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி திதி வரும் நிலையில், அதற்கு இரண்டு நாட்களுக்கு முன் திரயோதசி திதி நாளில், பிரதோஷ விழா கொண்டாடுவது வழக்கம். இதில் சனிக்கிழமை நாட்களில் வரும் பிரதோஷ விழா, சிறப்பு வாய்ந்தது. இவ்விழா இன்று, 27ம் தேதி நடைபெற உள்ளது. சிவன் கோவில்களில் இன்று மாலை 4:00 மணிக்கு சிவபெருமான், நந்திக்கு பால், தயிர், தேன், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடக்கும். பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.