உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு புண்ணியம் கிட்டும்; திருக்கோவிலுார் ஜீயர்

கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு புண்ணியம் கிட்டும்; திருக்கோவிலுார் ஜீயர்

திருக்கோவிலுார்: கும்பாபிஷேகத்தை காணும் பக்தர்களுக்கு புண்ணியம் கிட்டும் என திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கூறினார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமை வாய்ந்த திவ்யதேசத்தில் முதலானது, உலகளந்த பெருமாள் கோவில். முதல் ஆழ்வார்களின் முதல் மங்களாசாசன நிகழ்வும் இங்குதான் நடந்தது. தமிழ் வேதம் அவதரித்த பெருமை, பெரும் பேரும் இத்தலத்திற்கு உள்ளது. மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு அரசர்கள் மண்டபங்களும், கோபுரங்களும் கட்டி சம்ப்ரோஷணம் செய்துள்ளனர். அந்த வகையில் பழமையான கோவிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள கிழக்கு ராஜகோபுரம், மேற்கு ராஜகோபுரம், கட்டை கோபுரம் எனப்படும் வடக்கு ராஜகோபுரம், மூலவர், தாயார், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், மணவாள மாமுனிகளின் விமானங்கள், சன்னதிகள் திருப்பணி செய்யப்பட்டு புதுப்பொலியுடன் காட்சியளிக்கிறது. வரும் 5ம் தேதி காலை 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் மகா சம்ப்ரோஷணம் நடக்கிறது. முன்னதாக நாளை காலை யாகசாலை பூஜைகள் துவங்கி உபயவேத பாராயணங்கள், சிறப்பு பூஜைகள், வேதபிரபந்த சாற்றுமறைகள் நடக்கிறது. கோபுர தரிசனம் கோடி புன்னியம், விமான தரிசனம் சகல பாவங்களையும் நீக்கும், கருவறை மூலவர் தரிசனம் கஷ்டங்களை நீக்கும் என்பது சாஸ்திரம். அந்த வகையில் மகா கும்பாபிஷகத்தை சேவிக்கின்ற, காண்கின்ற, கேட்கின்ற பாக்கியம் பெற்றவர்களுக்கு ஆண்டவன் அருள் கிட்டும் என, ஜீயர் ஸ்ரீதேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !