பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அமர்நாத் யாத்திரை தொடங்கியது
புதுடில்லி; யாத்ரீகர்களின் முதல் குழுக்கள் முகாம்களிலிருந்து புறப்பட்டதையடுத்து வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கியது
தெற்கு காஷ்மீர் இமயமலைப் பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள, இயற்கையாக உருவான பனிலிங்கம் கொண்ட குகைக் கோயிலுக்கான வருடாந்திர அமர்நாத் யாத்திரை இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதற்காக பால்டால் மற்றும் நுன்வான் ஆகிய இரு அடிப்படை முகாம்களிலிருந்து யாத்ரீகர்களின் முதல் குழுக்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கின என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வப்போது மழை பெய்தபோதிலும், பாரம்பரியமான 48 கி.மீ நீளமுள்ள நுன்வான்-பஹல்காம் பாதை மற்றும் 14 கி.மீ நீளமுள்ள பால்டால் பாதை ஆகிய இரு வழித்தடங்களிலும் அதிகாலையிலேயே யாத்திரை தொடங்கியது என்று அதிகாரிகள் கூறினர்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் உள்ள பஹல்காம் நுன்வான் முகாம் மற்றும் மத்திய காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டம் சோனாமார்க் பகுதியில் உள்ள பால்டால் முகாம் ஆகியவற்றிலிருந்து ஆண்கள், பெண்கள் மற்றும் சாதுக்கள் அடங்கிய குழுக்கள் விடியற்காலையிலேயே புறப்பட்டுச் சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். முகாம்களில் அந்தந்த மாவட்ட துணை ஆணையர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கொடியசைத்து யாத்ரீகர்களின் குழுக்களை வழியனுப்பி வைத்தபோது, சிவ கோஷ முழக்கம் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தது என்றும் அவர்கள் கூறினர்.
முதல் குழு 2 வாரங்கள் முன்பு அமர்நாத் புறப்பட்டுச் சென்றது. இந்த குழுவில் 4822 பேர் இருந்தனர். தெற்கு காஷ்மீரில் பஹல்காம் முகாம், மத்திய காஷ்மீரின் சோனாமார்க் பகுதியில் உள்ள பால்டால் முகாம் ஆகியவற்றில் இருந்து யாத்ரீகர்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டனர். இந் நிலையில் பகவதி நகர் முகாமில் இருந்து 2வது குழு அமர்நாத்திற்கு புறப்பட்டு உள்ளது. இந்த குழுவில் 3865 பேர் பயணம் செல்கின்றனர். பாதுகாப்பு படைவீரர்கள், ஆயுதப்படை வீரர்கள் மற்றும் 201 வாகனங்களின் அணிவகுப்புகளுக்கு மத்தியில் யாத்ரீகர்கள் புறப்பட்டுச் சென்றனர். யாத்ரீகர்களுக்கு ரேடியோ அதிர்வெண் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஜிபிஎஸ் வசதியுடன் கண்காணிக்கும் வசதி இருக்கிறது. இதன் மூலம் அவர்களின் நடமாட்டத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணிக்க முடியும்.