உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்தோனேசியா பழமையான சிவன் கோவில் சீரமைப்பு பணி; நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

இந்தோனேசியா பழமையான சிவன் கோவில் சீரமைப்பு பணி; நாளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஜகார்த்தா; இந்தோனேசியா, யோக்யகர்த்தாவில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான பிரம்பனன் கோவிலுக்கான பாதுகாப்பு மற்றும் சீரமைப்புத் திட்டத்தை, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் இணைந்து தொடங்கி வைக்கவுள்ளதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடி தன் பயணத்தைத் தொடங்கும் முன் வெளியிட்ட அறிக்கையில், அதிபர் பிரபோவோ சுபியான்டோவுடன் இணைந்து யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோவில் வளாகத்தைப் பார்வையிடவிருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தியா மற்றும் இந்தோனேசியாவை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இணைத்து வரும் ஆழமான கலாச்சார மற்றும் நாகரிக உறவுகளுக்கு இக்கோவில் ஒரு "சிறப்பான சான்றாக" திகழ்கிறது என்று கூறினார். 


ஜகார்த்தாவில் உள்ள இஸ்தானா மெர்டேகாவில் இந்தோனேசிய அதிபருடன் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு இன்று கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, "நாளை அதிபர் பிரபோவோவுடன் இணைந்து யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோவிலுக்கான பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் பெருமை எனக்குக் கிடைக்கும்," என்று கூறினார். "ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான பிரம்பனன் கோவில், இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாகத் திகழ்கிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.


இந்தப் பாதுகாப்புத் திட்டமானது, தென்கிழக்கு ஆசியாவில் இந்தியாவின் கலாச்சார இராஜதந்திரம் மற்றும் ஆக்ட் ஈஸ்ட் கொள்கையின் ஒரு பகுதியாகும். பிரம்பனன் வளாகத்திற்குள் உள்ள பல சிறிய கோவில்களைச் சீரமைக்கவும் பாதுகாக்கவும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில், யோக்யகர்த்தா அருகே அமைந்துள்ள மிகப்பெரிய கோவில் வளாகங்களில் ஒன்றான பிரம்பனன், கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அசல் கட்டுமானங்களைக் கொண்டுள்ளது. மே 2006 ஜாவா நிலநடுக்கம் உட்படநிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்பு மற்றும் 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஏற்பட்ட அரசியல் அதிகார மாற்றம் ஆகியவற்றால் இக்கோவில்கள் சிதைந்து போயின; பின்னர் 17-ஆம் நூற்றாண்டில் இவை மீண்டும் கண்டறியப்பட்டன.


பிரம்பனன் கோவில் என்பது சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட 240 கோவில்களைக் கொண்ட ஒரு வளாகமாகும். பிரம்பனன் வளாகம் மூன்று செறிவான சதுர அமைப்புகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முழு வளாகத்திலும் மொத்தம் 224 கோவில்கள் உள்ளன. உள்வட்டச் சதுரத்தில் 16 கோவில்கள் உள்ளன; அவற்றில் மிக முக்கியமானது 47 மீட்டர் உயரமுள்ள மையச் சிவன் கோவிலாகும், இதன் வடக்கே பிரம்மா கோவிலும் தெற்கே விஷ்ணு கோவிலும் அமைந்துள்ளன. யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள இக்கோயிலின் கல் சிற்பங்கள், இந்தோனேசியப் பாணியிலான ராமாயணக் காவியக் காட்சிகளைச் சித்தரிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன. பிரம்பனன் கோயில் வளாகம், இந்தோனேசியா மற்றும் அப்பிராந்தியத்தின் செவ்வியல் காலத்தைச் சேர்ந்த ஒரு கலைப் படைப்பாக, சிவ வழிபாட்டுடன் தொடர்புடைய பிரம்மாண்டமான கலாச்சாரத்தைப் பறைசாற்றுகிறது.


1918-ஆம் ஆண்டு முதல் இக்கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன; இதில் கற்களை ஒன்றோடொன்று இணைக்கும் பாரம்பரிய முறையும், கோயிலின் கட்டமைப்பை வலுப்படுத்த கான்கிரீட் பயன்படுத்தும் நவீன முறைகளும் கையாளப்பட்டுள்ளன என்று அந்த உலகளாவிய அமைப்பு தெரிவித்துள்ளது. யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தலமான இது, 1998-இல் இந்தோனேசியாவின் தேசிய கலாச்சாரச் சொத்தாகவும் அறிவிக்கப்பட்டது. மே முதல் அக்டோபர் வரையிலான மாதங்களில், பௌர்ணமி அன்று இரவு கோயிலின் தெற்குப் பகுதியில் உள்ள திறந்தவெளி அரங்கில் ராமாயண நடன நாடகம் (பாலே) நிகழ்த்தப்படுகிறது. இதற்கிடையில், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் இந்தோனேசியாவின் முதல் கல்வி அமைச்சரான தேவந்தரா ஆகியோரின் பகிரப்பட்ட பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், வரவிருக்கும் ஆண்டை தாகூர்-தேவந்தரா கலாச்சார மற்றும் கல்விசார் ராஜதந்திர ஆண்டு என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.  முன்னதாக, இந்தோனேசியாவின் உயரிய குடிமகன் விருதான பிந்தாங் அடிபூர்ணா பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது; இவ்விருதை அவர் "கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும்", இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பிணைப்புகளுக்கும் அர்ப்பணித்தது குறிபிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !