தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழா; இனிப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன்
தஞ்சாவூர், – உலகப் புகழ்பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் அம்பாளின் சேனைத் தலைவியாக போற்றப்படும் வாராஹி அம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு விழா இன்று காலை கணபதி ஹோமம், கணபதி அபிஷேகத்துடன் துவங்கியது. பிறகு, அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாளை 14ம் தேதி மஞ்சள் அலங்காரம், 15ம் தேதி குங்கும அலங்காரம், 16ம் தேதி சந்தன அலங்காரம், 17ம் தேதி தேங்காய்ப்பூ அலங்காரம், 18ம் தேதி மாதுளை அலங்காரம், 19ம் தேதி நவதானிய அலங்காரம், 20ம் தேதி வெண்ணெய் அலங்காரம், 21ம் தேதி கனிவகை அலங்காரம், 22ம் தேதி காய்கறி அலங்காரம், 23ம் தேதி புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது.
விழா நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரை வராகி ஹோமம், காலை 10 மணி முதல் 11 மணி வரை சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சிறப்பு அலங்காரம், மாலை 6.30 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
விழாவின் நிறைவு நாளான 23ம் தேதி, தென்னக பண்பாட்டு மையம் சார்பில் நாதஸ்வரம், கரகாட்டம், ஒயிலாட்டம், ஜெண்டை வாத்தியம், வாணவேடிக்கை ஆகியவற்றுடன் வாராஹி அம்மன் நான்கு ராஜவீதிகளில் திருவீதி உலா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கார்த்திகேயன், செயல் அலுவலர் சுந்தரராசு, கண்காணிப்பாளர் ரவி மற்றும் அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் செய்து வருகின்றனர்.