உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் ஜூலை 21ல் துவக்கம்

அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவம் ஜூலை 21ல் துவக்கம்

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் ஆடி மாத பிரம்மோற்ஸவம் ஜூலை 20 முதல் 31 வரை விமரிசையாக நடக்க உள்ளது.


சித்திரை திருவிழாவை அடுத்து கள்ளழகர் கோயிலில் ஆடிப் பெருந்திருவிழா பெருமைக்குரியது. ஜூலை 21 காலை 8:15 மணிக்கு மேல் 8:45 மணிக்குள் கொடியேற்றத்துடன் இவ்விழா துவங்குகிறது. அன்று மாலை 6:30 மணிக்கு மேல் அன்ன வாகனத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருள்கிறார். தினமும் காலையில் தங்கப் பல்லக்கிலும், மாலையில் சிம்மம், அனுமார், கருடன், சேஷன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் எழுந்தருள்கிறார்.


ஜூலை 25 காலை 7:30 மணிக்கு மேல் 8:10 மணிக்குள் சிவகங்கை சமஸ்தானம் மறவர் மண்டபத்திற்கு தங்கப் பல்லக்கில் பெருமாள் எழுந்தருள்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வாக, ஜூலை 29ல் காலை 7:05 மணிக்கு மேல் 7:25 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது. அன்று மாலை புஷ்பப் பல்லக்கில் பெருமாள் எழுந்தருள்கிறார். அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி கதவுகள், ஒவ்வொரு ஆண்டும் ஆடி பவுர்ணமி அன்று மட்டும் மாலை திறக்கப்பட்டு, 18 படிகளுக்கும் படிபூஜை செய்து தீபாராதனை காட்டப்படும். பின் கதவுகளுக்கு சந்தனம் சாத்தும் நிகழ்வு நடைபெறும். இந்தாண்டு ஜூலை 29 மாலை 6:00 மணிக்கு மேல் அந்நிகழ்வு நடைபெறுகிறது. ஜூலை 30ல் தீர்த்தவாரி, 31ல் உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஆக.,12ல் ஆடி அமாவாசையை முன்னிட்டு மாலையில் கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருள்கிறார். பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு ஜூலை 23 முதல் 29 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு கோயில் வளாகத்தில் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஹரிஹரன் தலைமையில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !