சிவன் கோயில் குளத்தில் தண்ணீர் இறைத்தால் பாவம்: கல்வெட்டு தகவல்
திருவாடானை: திருவாடானை அருகே ஆக்களூர் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் குளத்தில் தண்ணீர் இறைத்தால் பாவம் என கல்வெட்டு குறிப்பிடுவதாக ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறினார்.
அவர் கூறியதாவது: நம் முன்னோர் நீர் சேமிப்பை கடவுளுக்கு சமமாக கருதினர். அதனால் ஒவ்வொரு கோயில்களிலும் குளம் வெட்டுவது முக்கிய கடமையாக கருதப்பட்டது. அவ்வாறு வெட்டப்படும் குளம் கோயில் பயன்பாட்டிற்கு மட்டுமே உபயோகிக்கப்பட்டது. ஆக்களூர் சிவன் கோயில் மகா மண்டபத்தின் நுழைவு வாயிலின் வலப்புற சுவரில் உள்ள கல்வெட்டின் சுருக்கத்தை மத்திய தொல்லியல் துறை 1926 ல் பதிவு செய்துள்ளது. இக் கல்வெட்டை படித்த போது 12 வரிகளில் 10 வரிகள் மட்டுமே வாசிக்க முடிகிறது. இரு வரிகள் பூச்சில் மறைந்துள்ளன. இதில் மன்னர் பெயர் இல்லை. எனினும் சேதுபதி மன்னர் கல்வெட்டாக இருக்கலாம். இதில் ‘‘நயினார் திருக்கோட்டமுடைய தம்பிறானர்த் திருக்குளத்திலே இறைக்க சொன்னவன் கெங்கை கரையிலே காராம் பசுவை கொன்ன பாவத்திலே போகக்கடவானாகவும், இராமீசுரத்திலே காராம் பசுவை கொன்ன பாவத்திலே போகக்கடவேனாகவும்,’’ என உள்ளது. இதன் மூலம் இக்கோயில் இறைவன் பெயர் நயினார் திருக்கோட்டமுடைய தம்பிறானார் என அறிய முடிகிறது. இக் கோயிலின் திருக்குளத்தில் தண்ணீர் இறைக்க சொன்னவன் கங்கை கரையிலும், ராமேஸ்வரத்திலும் காராம் பசுவை கொன்ற பாவத்திலே கடவான் என்பது இதன் பொருள். கங்கை கரைக்கு இணையாக சேதுக்கரையில் காராம் பசுவை கொன்ற பாவம் சேதுபதிகள் கல்வெட்டில் வரும். இதில் கூடுதலாக ராமேஸ்வரமும் குறிப்பிடப்படுகிறது. இது கி.பி.18ம் நுாற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம் என்றார்.