உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி முதல் வெள்ளிக்கிழமை; மைசூரு சாமுண்டி மலையில் கோலாகலம்

ஆடி முதல் வெள்ளிக்கிழமை; மைசூரு சாமுண்டி மலையில் கோலாகலம்

மைசூரு: ஆடி முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, மைசூரு சாமுண்டி மலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.


ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் இரட்டிப்பாகும். மைசூரு நகரின் தெருக்கள், சுற்றுவட்டார பகுதிகள், கிராமங்களில் சாமுண்டி அம்மன் படத்தை வைத்து பூஜை செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவர். சிறப்பு பஸ் மைசூரு சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரியை தரிசனம் செய்ய, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவர். மலைக்கு வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மலையில் தனியார் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால், வாகனங்கள் லலித மஹால் அரண்மனை மைதானத்தில் நிறுத்தப்பட வேண்டும். பின், அங்கிருந்து மலைக்கு அரசு பஸ் மூலம் மலைக்கு செல்லலாம். அதுபோன்று தரிசனம் முடித்த பின், மீண்டும் பஸ்சில் அடிவாரத்துக்கு வந்துவிடலாம். மலையில் கோவில் அருகில் தர்ம தரிசனம், 2,000 ரூபாய் கட்டண தரிசனம், வி.வி.ஐ.பி., தரிசனம் என மூன்று தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.


2,000 ரூபாய்க்கான தரிசனம் பெறுவதற்கான டிக்கெட் கவுன்டர் கோவில் அருகில் ஒன்றும், லலித மஹால் மைதானத்தில் இரண்டு கவுன்டர்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அதுபோன்று ஆன்லைனிலும் 2,000 ரூபாய் கட்டணம் செலுத்தலாம். வெள்ளிக்கிழமைகளில், காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை வி.ஐ.பி.,க்கள் தரிசிக்க மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதுபோன்று காலை 10:00 மணிக்கு மேல், வி.ஐ.பி.,க்களின் வாகனங்கள், மலைக்கு செல்ல அனுமதி இல்லை. வி.ஐ.பி.,க்களின் பெயரை கூறிக் கொண்டோ அல்லது அவர்களின் அனுமதி கடிதத்துடன் வருவோருக்கு அனுமதி அளிக்கப்படாது.


அன்னதானம் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. படிக்கட்டு வழியாக வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. படிக்கட்டு துவங்கும் இடத்தில் உள்ள சாமுண்டீஸ்வரின் அம்மனின் பாத சிற்பம், மலை உச்சியில் இருக்கும் படிக்கட்டில் மட்டுமே மஞ்சள், குங்குமம் தடவ அனுமதி உள்ளது. மற்ற படிக்கட்டுகளில் மஞ்சள் குங்குமம் தடவுவது, கற்பூரம் கொளுத்துவது, எண்ணெய் தடவ தடை விதிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை வசதி செய்யப்பட்டு உள்ளது. திருட்டு, தகராறுகளை தடுக்க, கண்காணிப்பு கேமரா, போலீசார் ரோந்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சாமுண்டி மலையில் மகிஷாசுரன் சிலை அருகில் வி.ஐ.பி.,க்களின் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளன. வெள்ளிக்கிழமை தரிசனம் செய்ய இயலாத பக்தர்களுக்காக, சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை தரிசனம் செய் ய வசதி செய்யப்பட்டு உள்ளது. லலித மஹால் மைதானத்தில் மூன்று நாட்களுக்கு இலவச பஸ்கள் இயக்கப்படுகின்றன.


இன்று அதிகாலை 5:00 மணிக்கு சாமுண்டீஸ்வரிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. 6:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை அம்மனை தரிசனம் செய்யலாம்.


கோவில் கோபுரம் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. கோவில் வளாகத்தில் பலவிதமான மலர்கள், தென்னை மர இலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளன.


தொகுப்பு பை: மொத்தமாக, 2,000 ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறுவோருக்கு, குடிநீர் பாட்டில், உலர்ந்த பழங்கள், சாமுண்டீஸ்வரி அம்மன் உருவப்படம், மஞ்சள், குங்குமம் பிரசாதம் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !