பேரூர் பட்டீஸ்வரர் கோயில் புதிய தேர் அமைக்கும் பணி விறுவிறுப்பு
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில், புதிய தேர் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோயிலாகவும், பிரசித்தி பெற்ற கோயிலாகவும் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் விளங்கி வருகிறது. இந்நிலையில், இக்கோயிலில், பங்குனி உத்திரத்தில் தேர் திருவிழா நடக்கும். இதில், பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மன், நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர் ஆகிய 5 தேர்கள் வலம் வரும். இந்நிலையில், பட்டீஸ்வரர் தேர் உருவாக்கப்பட்டு, 300 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், தேரின் உறுதித்தன்மை சான்று கிடைக்காமல், இந்தாண்டு, பல்வேறு இழுபறிகளுக்கு பின் தேரோட்டம் நடந்தது. இதனையடுத்து, 1.41 கோடி ரூபாய் மதிப்பில், பட்டீஸ்வரருக்கு புதிய தேர் அமைக்கும் பணி துவங்கப்பட்டது. இதற்காக, முதற்கட்டமாக, பெரம்பலூரில் இருந்து, 3 டன் எடையுள்ள இலுப்பை மற்றும் தேக்கு மரங்கள் கொண்டுவரப்பட்டு, தேருக்கான சிற்பங்கள் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுகுறித்து அறநிலையத்துறை துணை கமிஷனர் விமலா கூறுகையில்,"புதிய தேர் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. வரும் தை மாத இறுதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு, மாசி மாதத்தில் தேர் வெள்ளோட்டம் நடத்தப்படும். அடுத்தாண்டு புதிய தேரில், தேரோட்டம் நடக்கும்,"என்றார்.