பாலாத்தம்மன் கோவில் குளத்தை சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்
ஸ்ரீபெரும்புதுார்: படப்பை அடுத்த செரப்பனஞ்சேரியில், பராமரிப்பின்றி இருக்கும் பாலாத்தம்மன் கோவில் குளத்தில் குப்பைகளை அகற்றி, துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
குன்றத்துார் ஒன்றியம், செரப்பனஞ்சேரி ஊராட்சியில், பாலாத்தம்மன் கோவில் குளம் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன், அப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பாலாத்தம்மன் கோவில் குளம் விளங்கி வந்தது.
சில ஆண்டுகளாக கோவில் குளம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. அருகே உள்ள வீடுகள் மற்றும் கடைகளின் குப்பைகள், குளத்திலும், அதன் கரையிலும் வீசப்பட்டு வருகின்றன. இதனால், குளத்தின் நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது.
அதேபோல, இரவு நேரங்களில் குளக்கரையில் அமர்ந்து மது அருந்தும் ‘குடி’மகன்கள், மது மற்றும் தண்ணீர் பாட்டில்களை குளத்தில் வீசி செல்கின்றனர். எனவே, குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, பக்தர்களும், குடிநீருக்கு தவிக்கும் மக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.