மயிலம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா துவங்கியது.
மயிலம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 15ம் தேதி இரவு 8:00 மணிக்கு நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று முதல் நாள் திருவிழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு மயிலம் வள்ளி தெய்வானை சுப்ரமணியர், வீரபாகு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, வழிபாடு நடந்தது. தொடர்ந்து 11:30 மணிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. பின், மூலவர் தங்கக் கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 6 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் தினமும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. வரும் 15ம் தேதி இரவு 7:00 மணிக்கு பால சித்தரிடம் முருகப் பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அதனையடுத்து 8:00 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது. 10:00 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சுப்ரமணியசுவாமி மாலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 16ம் தேதி இரவு 8:00 மணிக்கு வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார்.