உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னாங்குடி புனித சவேரியார் சப்பரத் திருவிழா: ஹிந்துக்கள் பங்கேற்பு

பொன்னாங்குடி புனித சவேரியார் சப்பரத் திருவிழா: ஹிந்துக்கள் பங்கேற்பு

திருக்கோஷ்டியூர்; கல்லல் ஒன்றியம் பொன்னாங்குடியில் புனித சவேரியார் சர்ச் சப்பரத் திருவிழாவில் இந்துக்களும் சேர்ந்து கொண்டாடினர்.

பொன்னாங்குடியில் புனித சவேரியார் சர்ச்சில் சுமார் 1700 ஆண்டுகளுக்கு மேலாக சப்பரத் திருவிழாவில் இந்துக்களும் பங்கேற்று கொண்டாடி வருகின்றனர். புனித சவேரியார், புனித அருளானந்தர் ஆகியோர் இந்த சர்ச்சில் திருப்பலி நிறைவேற்றிய சிறப்பு பெற்றது. இங்கு ஆடி மாதம் தேர் பவனி என்ற சப்பரத் திருவிழா நடத்தப்படுகிறது. ஜூலை 17 ல் கொடியேற்றத்துடன் 10 நாள் விழா துவங்கியது. தினசரி மாலையில் சிறப்பு கூட்டு திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடந்தது.

ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு சப்பரத் திருவிழா துவங்கி இரு நாட்கள் நடந்தன. சர்ச் நிர்வாகிகள் மற்றும் கிராமத்தினர் நாட்டார்கள் மற்றும் இந்துக்களை சந்தித்து நெற்றியில் சந்தனமிட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்தனர். தொடர்ந்து நாட்டார்கள் மற்றும் இந்துக்கள் மாலை உள்ளிட்ட சீர்வரிசையுடன் புனித சவேரியார் சர்ச்சிற்கு சென்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்றனர். திருப்புத்தூர் புனித அமல அன்னை சர்ச் பங்குதந்தை அற்புதஅரசு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட முதல் சப்பரத்தில் காவல் தூதர் மைக்கேல் சம்மனசு, 2வது சப்பரத்தில் புனித சவேரியார், 3வது சப்பரத்தில் புனித ஆரோக்கிய மாதா ஆகியோரின் சொரூபங்கள் எழுந்தருளினர். திருப்பலியுடன் சொரூபங்களுக்கு புனித நீர் தெளித்தும், தூபக்கால் காண்பித்தும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சப்பரங்கள் புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சர்ச்சிற்கு வந்தது. வழியில் பொதுமக்கள் மூட்டை,மூட்டையாக பொரிகளை தூவி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !