அரகண்டநல்லூர் மாரியம்மன் கோவில்களில் சாக்கை வார்த்தல்
திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர் புத்துமாரியம்மன் கோவிலில் சாக்கை வார்த்தலை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அரகண்டநல்லூர், கொட்டாமேடு, தென்பெண்ணை ஆற்றை ஒட்டி அமைந்திருக்கும் புத்துமாரியம்மன் மற்றும் மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் அமைந்திருக்கும் முத்து மாரியம்மன் கோவில்கள் மிகவும் பழமையானது. இக்கோவிலின் ஆண்டு பெருவிழா கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 11:00 மணிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து சக்தி கரகம் புறப்பாடாகியது. வேண்டுதல் உள்ள பக்தர்கள் கூழ் குடம் எடுத்து வந்து மணிலா மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் இருக்கும் முத்து மாரியம்மனுக்கு படையலிட்டனர். பின்னர் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் இருக்கும் புத்துமாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் கூழ் படையலிடப்பட்டு மகாதீபாரதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது. இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடாகி மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வளம் வந்து, கோவிலை அடைந்தது. நாளை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.