உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குருவை பூஜிப்பதற்கான தினமே குருபவுர்ணமி: சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் அருளுரை

குருவை பூஜிப்பதற்கான தினமே குருபவுர்ணமி: சிருங்கேரி சாரதா பீடம் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் அருளுரை

சிருங்கேரி: குருபூர்ணிமாவை முன்னிட்டு சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் அருளுரை வழங்கினார்.

மனித வாழ்வில் தாய், தந்தை, குரு இம்மூவரும் கடவுள் மாதிரி போற்றி மதிக்கப்பட வேண்டியவர்கள் என்று வேதம் உபதேசிக்கிறது.

தாய், தந்தையர் நமக்குப் பிறப்பளித்து, தங்களுடைய சுக துக்கங்களைப் பொருட்படுத்தாமல், குழந்தைகளின் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு வளர்க்கின்றனர்.

அவர்களை மதிப்பது ஒவ்வொருவரின் முதற்கடமை. நமக்கு கற்றுக்கொடுத்து, வழிகாட்டி, ஞானத்தை அளிப்பவர் குரு. அவர் நமக்குக் கொடுக்கும் ஞானம் பல விதமாக இருக்கிறது. அதில் ஒன்று வாழ்வைச் சிறப்பாக நடத்தவும், வாழ்வாதாரத்தைப் பெறவும் உதவும் மருத்துவம், கட்டடவியல், தொழில்நுட்பம் முதலிய கல்விகள்.

இவை தவிர வேத சாஸ்திரங்களில் உபதேசிக்கப்பட்டுள்ள அபர வித்யை மற்றும் பரவித்யை உள்ளன. இதில் அபரவித்யை தர்மத்தைப் பற்றியும் கர்மானுஷ்டானத்தைப் பற்றியும் உபதேசிக்கிறது. பரவித்யை என்பது, மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய ஞானத்தைக் குறிக்கிறது. அதை உபதேசிக்கும் குருவுக்கு மேலாக வேறு ஒரு குரு இல்லை.

இந்த பர வித்யையின் பிறப்பிடம் நமது புனித பாரத தேசமே. இந்த பர வித்யையை உபதேசிக்கும் ஸத்குரு பரம்பரை கடவுளிடம் இருந்து ஆரம்பிக்கிறது.

இந்த குருபரம்பரையில் வேதவியாசர் முக்கியமானவர். வேதங்களை நான்காகப் பிரித்துத் தொகுத்து, 18 புராணங்களையும், மகாபாரதம் முதலான இதிகாசங்களையும், ப்ரஹ்ம ஸூத்திரங்களையும் இயற்றி, அத்வைத தத்துவத்தை உபதேசித்துள்ளார்.

அதே தத்துவத்தையே ஸ்ரீ ஆதிசங்கராசார்யார் நமக்கு உபதேசித்துள்ளார். அவர் நான்கு திசைகளில் நான்கு ஆம்னாய பீடங்களை ஏற்படுத்தினார். அவருடைய நான்கு சிஷ்யர்களில் பிரதானமான ஸ்ரீ சுரேச்வராசார்யரிடம் இருந்து ஆரம்பமான இந்த சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில், ஸ்ரீ வித்யாரண்யர் முதலான யதிவரேண்யர்கள் நம்மை அனுக்ரஹித்துள்ளனர்.

இந்த குரு பரம்பரையைப் பூஜிப்பதற்கான விசேஷ தினமே ஆஷாட பவுர்ணமி. அதனால்தான் இது குரு பவுர்ணமி, வியாச பவுர்ணமி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் பகவான் வேதவியாசர், சங்கராசார்யர் ஆகியோரைக்கொண்டுள்ள நமது குருபரம்பரையைப் பூஜித்து, துறவிகள் சாதுர்மாஸ்ய விரதத்தை மேற்கொள்கின்றனர்.

எனவே, நீங்கள் அனைவரும் இந்தப் புனித நாளில் பகவான் வேத வியாசரையும், ஸ்ரீ சங்கரரையும், நமது குருபரம்பரையையும் பூஜித்து, பயன்பெற வேண்டும். அனைவருக்கும் எங்களுடைய ஆசீர்வாதத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !