புத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி புத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா கொடியேற்றம் நடந்தது
குறிஞ்சிப்பாடியில் உள்ள பிரசித்தி பெற்ற புத்து மாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழா, இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் குறிஞ்சிப்பாடி மற்றும், சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி நேற்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை மற்றும், விநாயகர் வீதி உலா காட்சி நடந்தது. விழாவில் தினசரி புத்துமாரியம்மன் மதுரை மீனாட்சி, தட்சிணாமூர்த்தி, வேணுகோபாலன், வெண்ணைத்தாழி, கிருஷ்ணன், தவழும் கிருஷ்ணன், சரஸ்வதி, தெருவடைச்சான் ஆதிபராசக்தி, நாகமரச் சேவை, பார்த்தசாரதி, பல்லக்கு ஆகிய அலங்காரங்களில் எழுந்தருள உள்ளார். விழாவின் உச்ச நிகழ்வான செடல் பெருவிழா ஆகஸ்ட் 7ம் தேதி, வெள்ளிக்கிழமையும், 8ம் தேதி, சனிக்கிழமை காலை திருத்தேர் உலாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கோவில் செயல் அலுவலர் மஞ்சு, விழா கமிட்டி நிர்வாகிகள், அறங்காவலர் குழுவினர், குறிஞ்சிப்பாடி வியாபாரிகள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.