சிதம்பரேஸ்வவர் கோவிலில் கால பைரவர் பூஜை; பஞ்சதீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :19 hours ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிதம்பரேஸ்வவர் கோவிலில் கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.
கால பைரவருக்கு பவுர்ணமிக்கு பின் வரும் தேய்பிறை அஷ்டமியில் பக்தர்கள் பஞ்சதீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதன்படி கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில், ஈசானிய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நீலமேனியராய், நாய் வாகனத்துடன் எழுந்தருளியுள்ள கால பைரவர் சுவாமிக்கு தேய் பிறை அஷ்டமி தினமான நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு கலசாபிஷேகம் செய்து, வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. வழிபாட்டினை கோவில் அர்ச்சகர் அம்பி குருக்கள் குழுவினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.