உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்வ சேக்கிழார் விழா தொடக்கம்

தெய்வ சேக்கிழார் விழா தொடக்கம்

 சென்னை: சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின், 34ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவை முன்னிட்டு, முதல் நாள் நிகழ்வாக, தெய்வச் சேக்கிழார் கோவில் வழிபாடு, குன்றத்துாரில் நேற்று நடந்தது.

சேக்கிழார் ஆராய்ச்சி மையம், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மற்றும் ஆராய்ச்சிப் பல்கலை இணைந்து, 34ம் ஆண்டு தெய்வச் சேக்கிழார் விழாவை, நான்கு நாட்கள் நடத்துகின்றன.

இந்த விழா, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், ஆக., 2ம் தேதி வரை நடக்கிறது.

பன்னிரெண்டாம் நுாற்றாண்டில் பிறந்து, 63 சைவ நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பெரியபுராணம் எனும் காப்பியத்தை இயற்றிய சேக்கிழாருக்கு, குன்றத்துாரில் கோவில் உள்ளது.

இவ்விழாவின் தொடக்கமாக இங்கு, சேக்கிழார் வழிபாடு நேற்று நடந்தது.

இதில், திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், திண்டுக்கல் சிவபுரம் அதீனம், ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசர் தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று, அருளாசி வழங்கினர்.

சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான ஜெகதீசன், செயலர் சிவாலயம் மோகன், துணைச் செயலர் ராஜாராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

இரண்டாம் நாள் நிகழ்வுகள், இன்று காலை 7:00 மணிக்கு தொடங்குகின்றன. இதில், மங்கள இசை, ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் அருளுரை, தாமல் சரவணனின் எழிலுரை, சாரதா நம்பிஆரூரனின் நயவுரை, கருத்தரங்கம், விருது வழங்கல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !