உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பப்பாளியில் உருவான அதிசய விநாயகர்: மக்கள் வியப்புடன் பார்த்து தரிசனம்

பப்பாளியில் உருவான அதிசய விநாயகர்: மக்கள் வியப்புடன் பார்த்து தரிசனம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சுமார் 5 கிலோ எடையுள்ள பப்பாளி விநாயகர் வடிவில் அமைந்துள்ளது. அதிசயமாக உள்ள அந்த பப்பாளியை கூட்டம், கூட்டமாக வந்து மக்கள் பார்த்து சென்றனர். தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வருபவர் ரேணியஸ். இவர் எப்போதும்வென்றான் குடிநீர் வடிகால் வாரியத்தில் கிராமக்குடிநீர் திட்ட பிரிவில் உதவி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாரியம்மாள். இவர்கள் வீட்டில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பப்பாளிமரம் வைக்கப்பட்டது. இந்த பப்பாளி மரத்திலும் எல்லா இடங்களிலும் காய்ப்பது போல் காய்கள் காய்த்து வந்தன. இந்நிலையில் இந்த மரத்தில் வழக்கமாக காய்க்கும் காய்களை விட ஒரு பப்பாளிக்காய் வித்தியாசமான முறையில் இருந்துள்ளது. இதனால் அந்த காயை வீட்டில் உள்ளவர்கள் பறிக்காமல் அப்படியே விட்டு விட்டனர். சைஸ் மிகவும் பெரியதாகி வந்தாலும் வழக்கமாக சிறிய காய்களிலே பழுத்து விடும் அந்த மரத்தில் அந்த காய் மட்டும் பழுக்காமல் மஞ்சள் நிறத்திற்கு வராமல் பச்சை நிறத்திலே இருந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அந்த காய் விநாயகர் உருவத்தில் இருப்பதை பார்த்து வீட்டில் உள்ளோர் ஆச்சரியமும் அதிசயமும் அடைந்தனர். இந்த தகவல் அக்கம்பக்கத்தில் அரசல் புரசலாக பரவ ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் உள்ளோர் விநாயகர் வடிவில் உள்ள அதிசய பப்பாளியை வியப்பாக பார்த்து அதனை தரிசித்து விற்று சென்றதாக கூறப்படுகிறது. சுமார் 4 முதல் 5 கிலோ எடை வரை காய் பருத்த நிலையில் பின் பகுதியில் மட்டும் மஞ்சள் கலரில் பழுக்க துவங்கியது. வெயிட் அதிகமாகி விட்டதால் இனிமேல் காய் மரத்தில் இருக்க வேண்டாம் என்று நினைத்த வீட்டுக்காரர்கள் நேற்று அதனை மரத்தில் இருந்து பறித்தனர். தங்கள் வீட்டில் விநாயகர் வடிவில் உருவாகிய பப்பாளிக்கு ரேணியஸ் மனைவி மாரியம்மாள் பூஜைகள் செய்தார். இதனை தொடர்ந்து விநாயகர் வடிவிலான அந்த பப்பாளியை இரண்டாம் ரயில்வே கேட் அருகே உள்ள வரதவிநாயகர் கோயிலில் ருக்மணி, மாரியம்மாள் ஆகியோர் கொண்டு கொடுத்தனர். பின்னர் அங்கு வைத்தும் பூஜைகள் நடந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள், முக்கிய இடமான இரண்டாம் கேட் அருகே உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் அதிசய பப்பாளி விநாயகரை வந்து பார்த்து தரிசித்தனர். நீண்ட நேரத்திற்கு பிறகு பூஜிக்கப்பட்ட பப்பாளி விநாயகர் பக்தர்களுக்கு அப்படியே பிரசாதமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. பப்பாளி வடிவிலான விநாயகர் நேற்று தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !