திருப்புத்தூர் கிளி அய்யனார் கோயிலில் ஆடி திருவிழா
திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றியம் கா.பிள்ளையார்பட்டியில் கிளி அய்யனார் கோயில் நடந்த ஆடி சிறப்பு விழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிதறு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். இக்கோயிலில் கிராமத்தினர் பல தலைமுறைகளாக பாரம்பரிய முறைப்படி ஆடி மாதத்தில் விழா எடுக்கின்றனர். விழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் மதியாத கண்ட விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து மந்தை கருப்பர் கோயிலிலும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து கிளி அய்யனார் கோயிலுக்கு ஊர்வலமாக மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர். தொடர்ந்து அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து அபிேஷக,ஆராதனைகள் நடந்தன. பெண்கள் குலவையிட்டு வழிபட்டனர். ஏராளமான கிராமத்தினர் அர்ச்சனை செய்து சாமி வழிபாடு நடத்தினர். அப்போது கோயில் முன்பாக நூற்றுக்கணக்கான சிதறு தேங்காய்களை உடைத்தும், வெளிர் நிற குங்குமம் தூவியும் தங்களது நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். பின்னர் நாடகம், அன்னதானம் நடந்தது. ஏற்பாட்டினை சிங்கப்பூர்வாழ் இளைஞர்கள், காக்கும் கரங்கள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் கிராமத்தினர் செய்தனர்.