மதுரகாளியம்மன் கோவில் திருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
அன்னூர்: எல்.கோவில்பாளையம் மதுர காளியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா இன்று நடந்தது.
லக்கே பாளையம் கோவில்பாளையத்தில், 300 ஆண்டுகள் பழமையான மதுர காளியம்மன் கோவில் உள்ளது. ஈஞ்சங்குலத்தாரின் குலதெய்வமான இக்கோவிலில் பூச்சாட்டு திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. கடந்த 1ம் தேதி இரவு பக்தர்கள் அம்மனுக்கு தீர்த்த குடம் எடுத்து வருதல் நடந்தது. நேற்று முன்தினம் காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை கணபதி ஹோமமும், காலை 11:30 மணிக்கு கங்கணம் கட்டுதலும் நடந்தது. இன்று காலை 6:00 மணிக்கு பம்பை மேளத்துடன் அம்மன் அழைத்தலும், அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜையும் நடந்தது. காலை 9:00 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டது. மதியம் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மாவிளக்குகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். இதையடுத்து 50க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டி பலியியிடப்பட்டன. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். 7ம் தேதி காலை 10:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு விழாவும், மறுபூஜையும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.