ஆடி கிருத்திகை; திருத்தணி முருகன் கோயிலில் காவடிகளுடன் குவிந்த பக்தர்கள்
திருத்தணி; ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் விழாக்கோலம்: காவடிகளுடன் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி ஆடி கிருத்திகையையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் அதிகாலை முதல் மலைக் கோவிலில் குவிந்து வருகின்றனர். இதனால் மலைக்கோயில் தேர் வீதியில் காவடிகளுடன் பக்தர்கள் கூட்டம் விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பொது வழியில் சுமார் 5 மணி நேரமும், ரூபாய் 100 சிறப்பு கட்டண வழியில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி மாத முதல் கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் சுவாமிக்கு மகா தீபாரதனை நடைபெற்றது. மேலும் காவடி மண்டபத்தில் வள்ளி- தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருவதால் காவடி சுமந்து வந்த பக்தர்கள் காவடி மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு காவடிகள் செலுத்தி வருகின்றனர். ஆடி மாதம் முதல் கிருத்திகையில் ஏராளமானோர் காவடி சுமந்து வருவதால் மலைக்கோவில் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் . ஆடி மாதம் முதல் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மலைப்பாதை வழியாக மலைக்கோயிலில் குவிந்து வருகின்றனர். ஏராளமான வாகனங்களில் கோயிலுக்கு வருவதால் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் மலை அடிவாரத்தில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு திருக்கோயில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில் மற்றும் நடந்தும் மலை கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்துள்ள நிலையில் போலீசார் மிக குறைவாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், பக்தர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.