உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் துவக்கம்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் துவக்கம்

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. சிவபெருமான் இத்தலத்தில் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி பக்தர் மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்து மீண்டும் உயிர்பித்த அட்ட வீரத்தை தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு அபிராமி பட்டர் அவதரித்து அபிராமி அந்தாதியை இயற்றியது சிறப்பு. அபிராமி பட்டருக்காக தை அமாவாசையை அபிராமி அம்மன் பௌர்ணமி ஆக்கிய புராண வரலாற்றை உள்ளடக்கிய இக்கோவிலில் அபிராமி அம்மனின் ஆடிப்பூரம் உற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. அதனை முன்னிட்டு அபிராமி அம்பாள் சன்னதியில் உள்ள கொடிமரம் முன்பு விநாயகர், அபிராமி அம்பாள், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பல்லாக்கில் எழுந்தருள செய்யப்பட்டனர். தொடர்ந்து கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கொடிமரத்தில் ரிஷபக் கொடி ஏற்றப்பட்டு, பஞ்சமுக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பூஜைகளை ராமலிங்கம், மகேஷ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 10 நாள் உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக வரும் 13ஆம் தேதி திருத்தேர் உற்சவம், 14ஆம் தேதி தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது. இதுபோல வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதசுவாமி கோவில், சீர்காழி சட்டை நாதர் கோவிலில் ஆடிப்பூரம் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !