உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் க.அய்யம்பாளையம் ஸ்ரீமாரியம்மன்

காவல் தெய்வமாக அருள்பாலிக்கும் க.அய்யம்பாளையம் ஸ்ரீமாரியம்மன்

திருப்பூர் ; பார்வதியின் அவதாரமான மாரியம்மன், கிராமங்களில் பரவலாக வழிபடக்கூடிய தெய்வம். கோடை காலத்தில் வெப்ப நோய் வராமல் தடுக்க மழை வேண்டி மாரியம்மனை வேண்டுவர். ஒவ்வொரு ஊருக்கும், இடத்திற்கு ஏற்ப மாரியம்மனுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. அவ்வகையில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே, க.அய்யம்பாளையம் கிராமத்தில் அருள்பாலித்து வரும் மாரியம்மனுக்கும் பல்வேறு சிறப்புகள் உள்ளன.


இங்குள்ள மாரியம்மன் கோவில், 200 ஆண்டுகளுக்கு ‌ முற்பட்டது. கோவிலிலுள்ள மூலவர் திருமேனி, அவிநாசி அருகே திருமுருகன்பூண்டியில் உருவாக்கம் செய்யப்பட்டு முன்னோர்களால் கொண்டு வரப்பட்டது. ஊரில் உள்ள குளக்கரையில், புளிய மரத்தின் கீழ், சிறிய கற்கோவில் அமைத்து அம்மனை வழிபட்டு வந்தனர். அப்போது மழையின் சீற்றத்தால் கற்கோவில் நீரால் சூழ்ந்து விட்டது. மக்கள் அங்கு சென்று அம்மனை வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, கோவிலை அங்கிருந்து வடக்குப் பக்கமாக மாற்றி வைத்து மக்கள் வழிபட்டு வந்தனர்.


சமீபத்தில், அருகருகே இருந்த தெய்வங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த புதிய கோவில் கட்டப்பட்டு, கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டது. இங்குள்ள மாரியம்மனுக்கு வேப்ப மரமும், நார்த்தங்காயும் தலவிருட்சமாக உள்ளது. முன்னோர் காலத்திலேயே அம்மனுக்கு தங்கத்தில் தாலியும், வெள்ளியில் ஆபரணங்களும் இருந்தன. ஊருக்கு தென்கிழக்கில், கிழக்கு நோக்கி அம்மன் காட்சியளிக்கிறார். முன்புறம், அரச மரத்தடி பிள்ளையார், ராகு கேது உடன் அருள்பாலிக்கிறார். கோவில் உள்ளே மாகாளி அம்மன், விநாயகர், முருகன், ஐயப்பன், நவக்கிரகம் ஆகிய பரிபார தெய்வங்களும் உள்ளன.இங்குள்ள குழந்தை முருகனுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் தேர் வீதி உலா நடக்கிறது. ‘பூ’ கேட்கும் சம்பிரதாயம் திருவிழா துவங்கும் முன், அம்மனிடம் அனுமதி கேட்பதே பூ கேட்கும் முறையாகும். பூ கேட்பது செவ்வாய்க்கிழமையில் கேட்பார்கள் 15 நாள் நடைபெறும் திருவிழாவில், கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை நடக்கும். பம்பை, துடி, தப்பு, உடுக்கை, உருமி, பஞ்சமுக வாத்தியம், கொம்பு, எக்காளம் போன்ற இசை கருவிகளை வாசித்து நடனமாடுவர்.


கிராமப்புறங்களில் பெண்களுக்கு சீர் செய்யும் வழக்கம் உண்டு அதுபோல அம்மனுக்கு காலம் காலமாக சீர் செய்யும் வழக்கம் உள்ளது. சீர் செய்யும் குடும்பத்தில் உள்ள கிணற்றை தான் கங்கை என்று கூறுவர். ‘முக்கொம்பு’ அம்மனின் கணவனாக கருதுவர். பால்வடியும் மரத்தைக் கொண்டு கம்பம் போடுவார்கள். முக்கொம்பு போல் மரத்தை வெட்டி ஊரில் உள்ள சீர்காரர் வீட்டில் கிணற்றில் போட்டு விடுவர். அதன்பின், நான்கு நாள் கழித்து ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை ஊர்மக்கள் ஒன்று கூடி சீர்காரர் வீட்டிற்கு சென்று அனைத்து தெய்வங்களையும் அழைத்து கம்பம் எடுத்து வந்து கோவில் வாசலில் நடுவர். அப்போது இருந்து மாரியம்மன் சுமங்கலியாக காட்சியளிப்பாள். அந்நாளில் இருந்து ஐந்து நாட்களுக்கு அம்மன் ராஜ அலங்காரத்தில் அருள்பாலிப்பார். திருமணம் பொருத்தம், நிலம் வாங்க, வீடு வாகனம் வாங்க போன்ற தங்கள் காரியம் நிறைவேறுவதற்காக அம்மனிடம் பூ கேட்பார்கள். அம்மன் சிரசில் வலது புறம், இடது புறம் பூ வைத்து கேட்பார்கள். வலது புறமாக பூவிழுந்தால் அம்மன் உத்தரவு கொடுத்ததாக பொருள். இடது புறமாக பூ கொடுத்தாள் அந்த காரியம் செய்ய வேண்டாம் என்று பொருள். அம்மன் பூ கொடுத்து தாங்கள் நினைத்த காரியம் நிறைவேறினால் தன்னால் முடிந்த காணிக்கைகள்வேண்டுதல்கள் செலுத்துவார்கள். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை அம்மனுக்கு நகைகள் எடுத்து தருதல், கோயில் திருப்பணிக்கு உதவுதல், அம்மனுக்கு புடவை எடுத்து தருதல், அன்னதானம் வழங்குதல் என பல வகையில் தங்கள் வேண்டுதலை செய்வர்.


கண்பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கிடைத்தும், திருமண தடைகள் நீங்கி, குடும்ப பிரச்சினை, சொத்து பிரச்சனை போன்றவைகள் நீங்கி மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அருள்புரியும் தெய்வமாக மாரியம்மன் வீற்றிருக்கிறாள். அம்மை நோய் தாக்குதல் ஏற்படும்போது இங்குள்ள அம்மனை வேண்டிக் கொண்டால் சரியாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அரசு,வேம்பு ஆகியவை தல விருட்சங்களாக இங்கு உள்ளன. தைப்பூச விழாவின் போது தேரோட்டம் நடக்கும். இதேபோல் மாதம்தோறும் கிருத்திகையின்போதும் தேர் திருவீதி உலா நடக்கும். இது தவிர, அமாவாசை, பவுர்ணமி, கார்த்திகை தீபம், ஆடி வெள்ளி உள்ளிட்டவை இங்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. தினசரி, ஏழை எளிய மக்கள், 25 பேருக்கு, கோவில் கமிட்டி சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டு வருவது கூடுதல் சிறப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !