உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்

காஞ்சிபுரம் முருகன் கோவில்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு முருகன் கோவில்களில் நேற்று ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது.


ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டை முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, மூலவர் வள்ளி, தெய்வானை -– சமேத முருகனுக்கு 11 விதமான பொருட்களால் அபிஷேகமும், சந்தன காப்பு அலங்காரமும் நடந்தன. அதிகாலை 4:00 மணிக்கு உற்சவர் முருகன் பிரணவ உபதேச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி நேர்த்திகடன் செலுத்தினர். குமரகோட்டம் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கும், உற்சவர் முத்துகுமாரசுவாமிக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை, மலர் அலங்காரம் நடந்தது. திரளான பக்தர்கள் காவடி எடுத்தும், வாயில் வேல் குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பழனி ஆண்டவர் பெரிய காஞ்சிபுரம், நெமந்தகார தெரு, பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் மூலவருக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக அலங்காரம் மஹா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பழனி ஆண்டவர் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.


கூழமந்தல் காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலை கூழமந்தல் ஏரிக்கரையில் உள்ள 27 நட்சத்திர கோவிலில், கிருத்திகை நட்சத்திர அதிதேவதைக்கும், கிருத்திகை நட்சத்திர விருட்சத்திற்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. இளையனார்வேலுார் வாலாஜாபாத் அடுத்த இளையனார்வேலுாரில் உள்ள முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் தீபாராதனை நடந்தது. பக்தர்கள், பல்வேறு வகையான காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். குன்றத்துார் குன்றத்துார் மலை மீது முருகன் கோவில் அமைந்துள்ளது. தமிழகத்தில் வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே முருகன் கோவில் என்ற சிறப்பை இக்கோவில் பெற்றுள்ளது. ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு நேற்று காலை 4:00 மணிக்கு மகா அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்சவர் தங்க முலாம் பூசிய கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி வெள்ளியை முன்னிட்டு 15,000 பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். – நமது நிருபர் குழு –: 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !