மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம்; கொடியேற்றத்துடன் துவக்கம்
திருவாரூர்; மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் செங்கமலத்தாயார் ஆடிப்பூரம் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றம் இன்று காலை செங்கமலத்தாயார் சன்னதி முன்பு நடைபெற்றது. சிம்மம் சின்னம் வரையப்பட்ட கொடிக்கு பூஜை செய்து தீட்சதர்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடி மரத்தில் ஏற்றினர். விழாவில் கோவில் யானை செங்கமலம் கொடி மரத்தையும் தாயாரையும் வணங்கியது . அப்போது செங்கமலத்தாயார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் ஒரே சமயத்தில் சுவாமிக்கும் கொடிக்கும் அலங்கார தீபம் காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை 8 ம் தேதி முதல் தினமும் இரவு செங்கமலத்தாயார் ஒவ்வொரு தினமும் ஒரு வாகனத்தில் வீதியுலா நடைபெறும் . இதன் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூரம் தேரோட்டம் வரும் ஆகஸ்டு 15 ம் தேதி நடைபெற உள்ளது.