உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழாவுடன் நிறைவு

 திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை தெப்ப திருவிழாவுடன் நிறைவு

திருத்தணி: முருகன் கோவிலில் இன்று, மூன்றாம் நாள் தெப்பத்திருவிழாவுடன் ஆடி கிருத்திகை விழா நிறைவடைகிறது.


திருத்தணி முருகன் கோவிலில், கடந்த 4ம் தேதி முதல் இன்று வரை ஆடி கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம், ஆடி கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத்திருவிழா நடந்தது. நேற்று, இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவை ஒட்டி, அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. நேற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு காவடிகளுடன் வந்து, பொது வழியில் இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை வழிபட்டனர். மாலை 6:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமான் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, தெப்பத்தில் உற்சவர், 5 முறை குளத்தை சுற்றிவந்து அருள்பாலித்தார். இன்று மாலை, மூன்றாம் நாள் தெப்பத்திருவிழாவுடன் நடப்பாண்டிற்கான ஆடி கிருத்திகை மற்றும் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !