பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழா
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புதுச்சேரி – கடலுார் சாலை, கன்னியக்கோவில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்தோடு துவங்கியது.
தினமும் காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையொட்டி, பகல் 12:00 மணிக்கு சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
மாலை கோவில் எதிரே அக்னி குண்டத்தில் உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில், முதல்வர் ரங்கசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்டோரும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தெற்கு எஸ்.பி., பக்தவச்சலம் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.