ஆடி அமாவாசை: நீர்நிலைகளில் குவிந்த மக்கள்புனித நீராடிய தர்ப்பணம் செய்து வழிபாடு
ராமேஸ்வரம் :ஆடி அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், அக்னி தீர்த்தக்கடலில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், புனித நீராடினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமர், தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, பக்தருக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள், அநீர்நிலைகளில் க்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர், கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட, கோயில் நான்கு ரதவீதிகளை சுற்றி, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
சேதுக்கரை;ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடி அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டனர். ஆடி அமாவாசையில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர். திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.வழக்கத்தை விட இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நெரிசலில் தவித்தனர்.
கோவை பேரூர் நொய்யல் படித்துறையில் ஆயிரக்கணக்கானோர் ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனால், நொய்யல் படித்துறையில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பின்னர், பட்டீஸ்வரர் கோவிலுக்குச் சென்று நெய்விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தூத்துக்குடி; தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை, மற்றும் துறைமுக கடற்கரையில் ஏராளமானோர் காலையிலே திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதைப்போல் தாமிரபரணி ஆற்றங்கரைகளான ஸ்ரீவைகுண்டம், ஏரல் ஆத்தூர் உட்பட பல இடங்களில் தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்: இதைப்போல் திருச்செந்தூர் கடலில் ஏராளமானோர் ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
திருநெல்வேலி :ஆடி அமாவாசையையொட்டி பாபநாசம் கோயில் முன்பாக தாமிரபரணியில் ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
இதை தவிருங்கள்: அமாவாசை தினத்தில் மக்கள் அனைவரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வீட்டிலோ, ஆற்றங்கரையிலோ அல்லது கடற்கரையிலோ செய்ய வேண்டும். ஆறு உள்ளிட்ட நீர்நிலைகள் இல்லாத சாலையோர கோவில்களின் முன்பாக, பலர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை செய்கிறார்கள். அவர்கள் முன்னோர்களுக்காகப் படைக்கப்பட்ட உணவை, அங்கேயே விட்டுவிட்டு செல்வதால், அதன் மீது பைக் உள்ளிட்ட வாகனங்கள் ஏறிச் செல்கின்றன. இதனால் இந்த செயல்களை மக்கள் தவிர்க்க வேண்டும்.