உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருபார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி

திருபார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆடி அமாவாசை தீர்த்தவாரி

மயிலாடுதுறை; திருபார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஆடி அமாவாசை சங்கமுக தீர்த்தவாரி நடைபெற்றது. பூம்புகார் கடலில் திரளான பக்தர்கள் புனித நீராடி தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருபார்த்தன் பள்ளி கிராமத்தில் பார்த்தசாரதி பெருமாள், கோலவல்லி ராமர் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் 40வது திருத்தலமாக திகழும் இத்தலத்தில் பொய்கை ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் என இரு ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்துள்ளனர். அர்ஜுனன் ஞான உபதேசம் பெற்ற தலமாகவும், ஏகாதச ருத்ரர், அகஸ்தியர், வருணன் ஆகியோர் பூஜித்த ஸ்தலமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலின் திருபவித்ரோத்சவம் கடந்த 7ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள், தீர்த்தவாரி, சாற்று முறை நடைபெற்றது. இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு கோவிலில் இருந்து பெருமாள் பல்லாக்கில் புறப்பட்டு பூம்புகார் காவிரி சங்கமத்துறையில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சங்கமுக தீர்த்தவாரி நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி தீர்த்தவாரியை கண்டு  பெருமாளை சேவித்தனர். தீர்த்தவாரி பூஜைகள் மற்றும் ஏற்பாடுகளை பரம்பரை ஆதீனம் கிருஷ்ணகுமார் பட்டாச்சாரியார் தலைமையிலானோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !