அனந்தமங்கலம் தசபுஜ வீர ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
மயிலாடுதுறை: ஆடி அமாவாசையை முன்னிட்டு அனந்தமங்கலம் தசபுஜர் வீர ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோயிலில் உள்ளது. ராமாயணத்துடன் நேரடி தொடர்புடைய இக்கோயிலில் தனிசன்னதியில் திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் சுவாமி மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேய சுவாமியை கோயில் மண்டபத்தில் எழுந்தருள செய்து பால், இளநீர், சந்தனம், தேன், மற்றும் 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஞ்சநேய சுவாமிக்கு தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு, துளசி, வெற்றிலை, எலுமிச்சை மற்றும் வடை மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனைகள் செய்து ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.