மாரியூரில் முன்னோர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
சாயல்குடி: இறந்த முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையவும், அவர்களுக்கு நற்கதி அல்லது மோட்சம் கிடைக்கவும் கோயில்களிலோ அல்லது உரிய இடங்களிலோ ஏற்றப்படும் சிறப்பு விளக்கே மோட்ச தீபம் ஆகும் இது ஜீவனின் இருள் நீங்கி ஒளி பெற செய்யும் ஒரு ஆன்மிக சடங்காகும்.
சாயல்குடி அருகே மாரியூரில் உள்ள பூவேந்திய நாதர் கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதல் இரவு வரை மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக மாரியூர் மன்னார் வளைகுடா கடலில் ஏராளமானோர் புனித நீராடி பூவேந்திய நாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். மூலவருக்கு தொடர்ந்து பாலாபிஷேகம் நடந்தது. விளக்கில் எண்ணெய் ஊற்றி முன்னோர்களை நினைத்து ஏராளமானோர் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.